"சில மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்பாடு உள்ளது. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அது குறைந்த அளவிலேயே உள்ளது. இருப்பினும் அதன் புழக்கத்தைத் தடுக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன."
சென்னை புறநகரில் பள்ளி வளாகத்தில் தென்பட்ட போதைப் பொருளை பிபிசி தமிழ் காட்டியபோது, பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த விளக்கம் இது.
மாணவர்களின் நடை, உடை, சிகை ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் கற்றலில் பல்வேறு சிக்கல்களை அவர்கள் எதிர்கொண்டு வருவதாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் (Anti-Drug Clubs) மூலம் பயன்பாட்டைத் தடுப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக, தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது.
இந்த நிலையில், உண்மையில் 'பள்ளிகளில் என்ன நடக்கிறது?' என்பதை அறிய களத்திற்குச் சென்றது பிபிசி தமிழ்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, 'பள்ளி, கல்லூரிகளைக் குறிவைத்து போதைப் பொருள் விற்பனை நடக்கிறதா?' என்ற தலைப்பில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி பிபிசி தமிழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. சென்னை மற்றும் புறநகரில் உள்ள பள்ளிகளுக்கு பிபிசி தமிழ் களஆய்வை அடிப்படையாக வைத்து அந்தக் கட்டுரை வெளியானது.
அப்போது, மாணவர்கள் கூடும் இடங்களில் ஒரு வகை புகையிலைப் பொருட்களைப் பார்க்க முடிந்தது. பள்ளிகளுக்கு அருகிலுள்ள பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விற்பனை நடந்து வருவதையும் அந்தக் கள ஆய்வில் கண்டறிந்தோம்.
'தற்போது அதே பள்ளிகளில் போதைப் பொருள் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா?', 'மேல்நிலை வகுப்புகளில் ஆசிரியர்களால் எந்தவித சிரமமுமின்றி வகுப்பெடுக்க முடிகிறதா?' என்பதை அறியும் முயற்சியில் பிபிசி தமிழ் இறங்கியது.
பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன?
சென்னையின் புறநகர்ப் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி அது. அங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அப்பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
தலைமை ஆசிரியர் அறைக்குச் செல்லும் வழியில் இருந்த மரத்தின் அருகில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகையான போதைப் பொருளைப் பார்க்க நேர்ந்தது.
தலைமை ஆசிரியரைச் சந்திக்கச் சென்றபோது, சில ஆசிரியைகள் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு, மத்திய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தது.
"ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் நடந்து வருகின்றன. காலை அல்லது மாலை நேரத்தில் இவற்றை மேற்கொள்ள வேண்டும். வாரம் முழுவதும் ஆசிரியர்கள் செல்வதால் கற்றல் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது" என்றார் பள்ளி தலைமை ஆசிரியர்.
"கற்றலில் தொய்வு இருக்கக்கூடாது எனப் பள்ளிக் கல்வித் துறை கூறுகிறது. கற்றலைத் தாண்டிய பணிகளால் கூடுதல் மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டிய சூழல் உள்ளதாக" அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்பட்ட போதைப் பொருள் தென்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, "மாணவர்களின் புத்தகப் பைகளை அவ்வப்போது சோதனை செய்கிறோம். முன்பைவிட புகையிலைப் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது" எனத் தெரிவித்தார்.
அவரை அழைத்துக் கொண்டு பள்ளி மைதானத்தை வலம் வந்தோம். சில இடங்களில் பயன்படுத்தப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பார்க்க முடிந்தது. அதை அதிர்ச்சியுடன் கவனித்த தலைமை ஆசிரியர், "மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுக்கு இந்தப் பழக்கம் இருப்பதாக" கூறிய அவர், "பள்ளிக்கு அருகிலுள்ள சில கடைகளில் போதைப் பொருட்கள் விற்கப்படுவதாகத் தெரிய வந்தது. காவல்துறை இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
"பள்ளி வளாகத்தில் காவலர் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும் போதைப் பயன்பாடு தொடர்கிறதா?" எனக் கேட்டபோது, "இந்தப் பகுதியில் மறைந்த தலைவர் சிலை ஒன்றைச் சேதப்படுத்திவிட்டனர். அதற்காக மட்டுமே அவர் பாதுகாப்புப் பணிக்கு வருகிறார்" என்று தெரிவித்தார்.
தலைமை ஆசிரியர் கூறுவதை உறுதிப்படுத்த பள்ளிக்கு அருகில் இருந்த பெட்டிக் கடைக்குச் சென்றோம். கடைக்காரரிடம் தடை செய்யப்பட்ட போதைப்பொருளைக் காட்டிக் கேட்டபோது, "அவற்றை விற்பதில்லை. காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்" எனக் கூறினார்.
ஆனால் அங்கு சிகரெட் எளிதாகக் கிடைப்பதையும், மற்ற பெட்டிக் கடைகளிலும் இதேபோன்ற சூழல் நிலவுவதையும் காண முடிந்தது. அங்கிருந்து, புறநகரில் அரசின் சமூக நீதித்துறையால் நடத்தப்படும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பிபிசி தமிழ் சென்றது.
'மறைத்து வைக்கும் இடம் தெரியவில்லை'
அந்தப் பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நாங்கள் சென்றபோது சில மாணவர்கள் மைதானங்களில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கும் தலைமை ஆசிரியர் அறைக்குச் செல்லும் பாதையிலும் மரத்தடிகளிலும் அரசு தடை செய்த போதைப் பொருள்களைப் பார்க்க நேர்ந்தது.
இதுகுறித்து பள்ளியின் மேல்நிலை வகுப்பு ஆசிரியர் ஒருவரிடம் கேள்வி எழுப்பியபோது, "மாணவர்கள் மத்தியில் போதுமான அளவு போதைப் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக" கூறினார்.
மேலும் அவர், "காலையில் இறைவணக்கம் பாடும்போது மாணவர்களின் புத்தகப் பைகளில் எதாவது உள்ளதா எனச் சோதிக்கிறோம். அதையும் மீறி ஒரு சிலர் மறைமுகமாகப் பயன்படுத்துகின்றனர். எங்கு மறைத்து வைக்கிறார்கள் என்பதே தெரிவதில்லை" எனக் குறிப்பிட்டார்.
புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களைப் பங்கெடுக்க வைப்பதாகக் கூறிய அவர், "மேல்நிலை வகுப்புகளில் ஆசிரியைகளை சில மாணவர்கள் பார்க்கும் விதமே வித்தியாசமாக இருப்பதாகவும், கவனமின்மை, மரியாதைக் குறைவாகப் பேசுவது போன்ற செயல்களில் மாணவர்கள் சிலர் ஈடுபடுவதாகவும்" தெரிவித்தார்.
மறுபுறம், பள்ளிக்கு அருகில் இருந்த பெட்டிக் கடைகளில் சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களின் விற்பனை நடக்கிறதா என்பதை தெளிவாக உறுதி செய்ய முடியவில்லை.
'புகையிலை... மதுபான வடிவில் குளிர்பானம்'
இதைத் தொடர்ந்து, சென்னையின் மத்திய பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றுக்கு நாங்கள் சென்றிருந்தபோது மாணவர் சேர்க்கைப் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன.
சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கும் மைதானத்தில் பயன்படுத்தப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பார்க்க நேர்ந்தது.
பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, "பள்ளிக்கு அருகில் இவை கிடைப்பதில்லை. ஒரு மாணவர் பயன்படுத்தியதை அறிந்து விசாரித்தோம். புலம்பெயர் தொழிலாளர் ஒருவரிடம் வாங்கியதாகக் கூறினார். காவல்துறையில் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுத்தோம்" என்றார்.
கடந்த ஆண்டு தங்கள் பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்றையும் அவர் குறிப்பிட்டார். "மாணவர் ஒருவர் மதுபான பாட்டிலில் உள்ள பானத்தைக் குடிப்பதாக புகார் வந்தது. அதைப் பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியபோது குளிர்பானம் எனத் தெரிய வந்தது" என்றார்.
ஒன்பதாம் வகுப்பில் இருந்தே சில மாணவர்கள் திசை மாறத் தொடங்குவதாகக் கூறிய அவர், "மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களின் செயல்களைப் பார்த்து அதேபோலச் செயல்படத் தொடங்குவதைப் பார்க்க முடிவதாக" குறிப்பிட்டார்.
மேலும், "ஆசிரியர்களுக்குப் பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை. அவ்வாறு பிரச்னை வந்தாலும் போக்சோ கமிட்டி மூலம் தீர்வு கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் நாளொன்றுக்கு மூன்று வகுப்புகள் பாதிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் ஈடுபட்டோம். இதனால் போதிய விடுப்பு கிடைப்பதில்லை" எனக் குறிப்பிட்ட அவர், அந்த நேரங்களில் வகுப்பறையில் ஆசிரியர் இல்லாவிட்டால் மாணவர்கள் திசைமாறுவதைத் தடுப்பது சிரமமாக உள்ளதாவும் கூறினார்.
'பெற்றோரிடம் பொறுப்புணர்வு தேவை'
"தவறான செயலில் ஈடுபடும் மாணவர் குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படுகிறதா?" என அவரிடம் கேட்டபோது, "இதற்கென தனியாக ஒரு கையேட்டைப் பராமரித்து வருகிறோம். ஆனால், பெற்றோர் மத்தியில் பொறுப்புணர்வைப் பார்க்க முடிவதில்லை. மாணவர் சேர்க்கையின்போது மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர்" என்றார்.
அவர்களில் பலர் தினசரி கூலி வேலைக்குச் செல்வதால் ஊதியம் பாதிக்கும் என்பது பிரச்னையாக உள்ளதாகக் கூறிய அவர், "அவர்கள் என்றாவது பள்ளிக்கு வரும்போது அவர்களது மகனின் செயல்களை எழுதி வைத்துள்ள நோட்டில் கையெழுத்து வாங்கிக் கொள்வதாக" தெரிவித்தார்.
"அதேநேரம், நாங்கள் தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றுவதில்லை. ஏனெனில், பள்ளியில் இருப்பதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பு. இங்கிருந்து வெளியேற்றிவிட்டால் அவர்கள் பாதை மாறிவிடும் அபாயம் உள்ளது" என்றார்.
அதேவேளையில், மாணவர்களின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டால் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார் திருவள்ளூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக இருக்கும் ஷீபா அறிவுடைவேந்தன்.
முன்பு பெற்றோர்-ஆசிரியர் கழகமாக இயங்கி வந்த இவை, இப்போது அரசுப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழு என்ற பெயரில் செயல்படுகின்றன.
பிபிசி தமிழிடம் பேசிய ஷீபா, "பெற்றோர்களில் பலரும் காலை 7 மணிக்கே வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். அவர்களை மாலை நேரங்களில் சந்தித்து மாணவர்கள் தொடர்பான குறைகள் இருந்தால் தெரிவித்து வருகிறோம்" என்றார்.
மாணவர்கள் தவறான பாதைக்குச் செல்லாமல் இருப்பதற்கு உறுதுணையாக இருக்குமாறு பெற்றோரிடம் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், "பேருந்து நிலையம், ரயில் நிலையம் என மாணவர்கள் வரும் பாதைகளில் கண்காணித்து வருகிறோம். ஏதேனும் தவறாகத் தெரிந்தால் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்" என்றார்.
'அரசின் ஐந்து நடவடிக்கைகள்'
ஆகஸ்ட் 11ஆம் தேதி சென்னையில் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். தமிழ்நாடு முழுவதும் 14,000 பள்ளிகள் மற்றும் 4,900 கல்லூரிகளைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் உறுதிமொழியை ஏற்றதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அப்போது 'போதைப்பொருள் மற்றும் புகையிலை இல்லா வளாகம்' (Drug and Tobacco Free Campus) என்ற முன்னெடுப்பை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். அதன்படி,
- அனைத்து மாணவர்களுக்கும் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் என்டிபிஎஸ் (NDPS) சட்டத்தின்கீழ் விதிக்கப்படும் தண்டனைகள் குறித்தும் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனை (Counselling) அளிப்பது குறித்தும் பயிற்சி வழங்கப்படும்.
- போதைப்பொருளைப் பயன்படுத்துவதில்லை என உறுதியளிக்கும் தன்னார்வ உறுதிமொழிப் பத்திரத்தில் மாணவர்கள் கையெழுத்திடுவார்கள்.
- தெருக்கூத்து, பல்வேறு போட்டிகள், பேரணிகள், போதைப்பொருள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுதல் போன்ற போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
- போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்களின் (Anti-Drug Clubs) உறுப்பினர்களுக்குப் பயிற்சி வழங்குவதன் மூலம் அவை வலுப்படுத்தப்படும்.
- மாணவர்களிடையே ஏற்படும் ஆரம்பக்கட்ட நடத்தை மாற்றங்களைக் கண்டறிந்து, சக மாணவர் மட்டத்தில் ஆதரவு வழங்குவதற்காக மாணவர் தூதர்கள் நியமிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
'உளவியல் சிக்கலைக் கொடுக்கும் பள்ளிகள்'
பிபிசி தமிழ் கள ஆய்வை மேற்கொண்ட ஒரு பள்ளியின் கரும்பலகையில் ஆசிரியர் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை போன்ற விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அதே பலகையில் காவலர், தூய்மைப் பணியாளர் பணியிடங்களில் 'பூஜ்ஜியம்' என எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, "ஆண் தூய்மைப் பணியாளர் வேண்டுமெனக் கேட்டுள்ளோம். மாநகராட்சியில் இருந்து பதில் வரவில்லை. பல பணியிடங்கள் காலியாக உள்ளன" என்று தெரிவித்தார்.
இவை மாணவர்கள் மத்தியில் பல்வேறு உளவியல் சிக்கல்களை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர் சே.பிரபாகரன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பல பள்ளிகளில் சுற்றுச்சுவர் இருப்பதில்லை. பெயரளவுக்குக்கூட கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. போதிய தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை" என்றார்.
"ஆசிரியர்களுக்கு கற்றல் அல்லாத பணிகள் அதிகளவில் ஒதுக்கப்படுவதால் மாணவர்களைக் கண்காணிப்பதில் பெருமளவு தொய்வு ஏற்படுவதாகவும்" அவர் விமர்சித்தார்.
வளரிளம் மாணவர்களில் கணிசமானோருக்கு ஆளுமைக் கோளாறு தொடர்பான சிக்கல்கள் உள்ளதாகக் கூறும் சே.பிரபாகரன், "இவர்களால் சில ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல்கள் உருவாகின்றன. பணியை பயமில்லாமல் செய்யக்கூடிய நிலை உருவாக வேண்டும்" என்றார்.
"மாணவர்களை எந்தச் சூழலிலும் அடிக்கக்கூடாது எனப் பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. அதையும் மீறி சில நேரங்களில் கண்டிக்க முற்படும்போது துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடுகிறது" எனக் குறிப்பிட்டார்.
உளவியல் மருத்துவர் கூறுவது என்ன?
"மாணவர்களை நல்வழிப்படுத்துவது என்பது அனைத்து நிலைகளிலும் நடக்க வேண்டும்" எனக் கூறுகிறார், கீழ்பாக்கம் மனநல காப்பகத்தின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான பூர்ணசந்திரிகா.
அதோடு, "மாணவரின் நிலை குறித்து ஆசிரியருக்கு முதலில் தெரிந்துவிடும். அதனால் ஏற்படக்கூடிய தீமைகளை மாணவருக்குத் தொடர்ந்து எடுத்துக் கூற வேண்டும். போதைப்பொருள் விற்பனையின் மூலத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இத்துடன் கூடுதலாக, "போதையில் இருந்து மீள்வதற்கு தொடர்ச்சியாக உளவியல் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மனநல சிகிச்சை மையங்கள் உள்ளன" என்கிறார் பூர்ணசந்திரிகா.
'போலீஸ் அக்கா' திட்டம்
பள்ளிகளில் தூய்மைப் பணியாளர் பணியிடம், காவலாளி உள்பட ஆசிரியர்கள் கூறும் பிரச்னைகளைச் சரிசெய்யும் முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறுகிறார், பள்ளிக் கல்வித்துறையின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் இணை இயக்குநர் சாந்தி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரையின்படி, மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகளை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு திருக்குறளை அடிப்படையாக வைத்து கதைப் புத்தகத்தை அச்சடித்துக் கொடுத்துள்ளோம். பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் முறையாக நடத்தப்படவுள்ளன. அந்த வகுப்புநேரத்தை பிற பாடங்களுக்கான ஆசிரியர்கள் கடன் வாங்கும் செயல்கள் நடந்து வந்தன. அவ்வாறு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்" என்று விளக்கினார்.
அனைத்துப் பள்ளிகளிலும் போதை எதிர்ப்பு மன்றங்கள் செயல்பட்டு வருவதை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், "மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதைக் கண்டறிவதற்கு மன்றங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும்" கூறினார்.
தமிழ்நாடு அரசு போதையில்லா தமிழ்நாடு (TNDrugfree App) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதைக் குறிப்பிட்டுப் பேசிய சாந்தி, "தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை குறித்து யார் புகார் கொடுத்தாலும் சம்பந்தப்பட்ட துறைக்கு அவை சென்றுவிடும். புகார்தாரர் யார் என்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுகிறது" என்றார்.
மேலும், "பள்ளிக் கல்வித்துறையில் 14417 என்ற உதவி எண் உள்ளது. எந்தப் பிரச்னை வந்தாலும் மாணவர்கள் இந்த உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். கடந்த ஆண்டு குழந்தைத் திருமணம், ஆசிரியர் செயல்பாடுகள், போக்சோ புகார்கள் குறித்த புகார்கள் அதிகளவில் வந்தன. தற்போது அவை குறைந்துள்ளன" என்று விவரித்தார்.
இவற்றுடன் கூடுதலாக பள்ளிகளில் 'போலீஸ் அக்கா' திட்டம் செயல்பட்டு வருவதாகக் கூறிய சாந்தி, "சம்பந்தப்பட்ட காவல் நிலைய பெண் காவலர் ஒருவர் மாணவர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பார். போக்சோ புகார், இணைய குற்றம் ஆகியவை குறித்து புகாரளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.
பிபிசி தமிழ் மேற்கொண்ட கள ஆய்வில் பெரும்பாலான பள்ளிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் புழக்கம் இருப்பதை உறுதி செய்ய முடிந்த நிலையில், "பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் விற்பனை தடுக்கப்பட்டாலும், மாற்று வழிகள் மூலம் அவை மாணவர்களின் கைகளுக்கு வருவதாகவும், போதைப் பொருள் விற்பனையின் மூலத்தைக் கண்டறிந்து தடுத்தால் மட்டுமே 'போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற அரசின் நோக்கம் நிறைவேறும்" எனவும் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Facts Only
* A school principal stated that some students exhibit changes in their demeanor, dress, and hairstyle, and are facing various learning complications.
* The Tamil Nadu Police reported that Anti-Drug Clubs are working to prevent drug use in schools.
* A BBC Tamil investigation found evidence of certain smoking materials in the school premises of a government school in Chennai's suburbs.
* A school principal mentioned that teachers were engaged in a discussion regarding the national population census, which affected learning time.
* The principal noted that some students reported increased stress due to non-academic tasks related to the census work.
* School officials stated they conduct random checks of students' bags and observed a decrease in smoking material use.
* A school principal indicated that some students displayed behaviors such as inattentiveness and disrespectful speech in higher grades.
* The administration claimed no expulsion of students engaging in wrongdoings, citing the need for safety.
* School management committees are being involved in taking action regarding student behavior changes.
* An investigation at another school found smoking materials on the school grounds.
* A school principal at a government school reported that some students were using substances, though they claimed sales did not occur near the school.
* A government school stated they conduct checks of students' bags during morning prayers.
